×

ஏலகிரி மலைக்கு வரும் முகக்கவசம் அணியாத சுற்றுலா பயணிகளுக்கு அபராதம்-ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை

ஜோலார்பேட்டை : ஏலகிரி மலைக்கு வரும் சுற்றுலா பயணிகளில் முகக்கவசம் அணியாத நபர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை 14 சிறிய கிராமங்களை உள்ளடக்கி தனிஊராட்சியாக செயல்பட்டு வருகிறது. இங்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். மேலும், இது சுற்றுலா தலம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் வந்து கண்டுகளித்து செல்கின்றனர்.

ஏலகிரி மலையில் மலைவாழ் மக்கள் உட்பட பொதுமக்களுக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி 100 சதவீதம் செலுத்தப்பட்டு, கலெக்டரிடம் பரிசு மற்றும் பாராட்டு சான்று பெறப்பட்டுள்ளது. தற்போது பரவி வரும் கொரோனா  தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில், ஊராட்சி நிர்வாகம் சார்பில் அங்குள்ள கொட்டையூர் பகுதியில் சோதனைச்சாவடி அமைத்து, பல்வேறு பகுதிகளில் இருந்து ஏலகிரி மலைக்கு வரும் சுற்றுலா பயணிகளை தீவிரமாக கண்காணித்து வருகிறது.

அங்கு சுற்றுலா பயணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட விவரங்கள் கேட்டறிந்து தடுப்பூசி செலுத்தாத நபர்களுக்கு கட்டாயம் தடுப்பூசி செலுத்திய பிறகே அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும், அவர்களது உடல் வெப்பநிலை கட்டாயம் பரிசோதிக்கப்படுகிறது. இதுதவிர சுற்றுலா பயணிகளில் முகக்கவசம் அணியாத நபர்களுக்கு ₹500 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இப்பணிகளை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன், துணைத்தலைவர் அ.திருமால் ஆகியோர் தலைமையில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் ஏலகிரி மலைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதாக, ஊராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags : Panchayat administration ,Yelagiri hill , Jolarpettai: Panchayat administration has fined tourists for not wearing helmets on Yelagiri hill.
× RELATED திண்டுக்கல் சீலப்பாடியில் கழிவுநீர் கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றம்